[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 11:18:44 IST 2010


6. ரகசியமாக தகவல் திருடும் மென்பொருட்கள்.

மறைக்கப்பட்ட மூலநிரல் (closed source) மென்பொருளுக்கும், திறந்த
மூலநிரல் (open source) மென்பொருளுக்கும் என்ன வேறுபாடு?

நீங்களே ஊகித்திருப்பீங்களே! திறந்த மூலநிரல் மென்பொருட்களின் மூலநிரல்
வெளிப்படையாகக் கிடைக்கிறது.

"சரி, அதனால என்ன?" என்று கேட்பீங்களே!

ஒரு மென்பொருளின் மூல நிரல் என்பது அதன் <b>செய்முறை</b> கட்டளைகளை
(தந்தூரி கோழி செய்முறை போல, மென்பொருள் உருவாக்க செய்முறை)
உள்ளடக்கியது.

கடையில் தந்தூரி கோழி சாப்பிட்டால், அதை எப்படி செய்தார்கள் என்று
உங்களுக்குத் தெரியாது. (எப்படி செய்திருப்பார்கள் என்று ஊகிக்க
முயற்சிக்கலாம்).

1. உணவு விடுதியில் சாப்பிடும் தந்தூரி கோழி செய்யும் முறையையும்
உங்களுக்குக் கொடுத்து விட்டால், நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட்டுக்
கொள்வீர்கள், ஒரு வேளை விடுதிக்குப் போவதையே நிறுத்தி விடுவீர்கள்.

அதே போல மென்பொருள் நிறுவனங்கள் மூலநிரலை மென்பொருள் வாங்குபவர்களுக்குத்
தருவதில்லை, அதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே நிறுவனத்துக்குப் போய்
மென்பொருள் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் நன்கு கல்லா
கட்டுவார்கள்.

2. பணம் மட்டும் இல்லை கேள்வி. நமக்குப் பாதகமான, அவர்களுக்கு தேவையான
சேர்க்கைகளை சேர்த்துக் கொண்டால் நமக்குத் தெரியவே வழியில்லை.
செய்முறையில் என்னென்ன செய்கிறார்கள் என்று நமக்குத் தெரிவதேயில்லை.

"ஒவ்வொரு மாதமும் 12ம் தேதி, கணினி இணையத்தில் இணைக்கப்பட்டிருந்தால்,
போன மாதம் 12ம் தேதியிலிருந்து இன்று வரை இணையத்திலிருந்து இறக்கிய
கோப்புகளின் பட்டியல் ஒன்றை தயாரித்து மைக்மோசாப்டுக்கு அனுப்பு" என்று
விண்டோசில் ஒரு நிரல் கட்டளையை சேர்த்து விட்டால் நமக்கு அது தெரிய
வாய்ப்பில்லை. மைக்ரோசாப்டு அப்படி எல்லாம் செய்யாமல் இருக்கலாம், ஆனால்,
நமக்கு என்ன தெரியும்? எல்லாமே மூடுமந்திரமாக, நம் பார்வைக்கு
புலப்படாமல், ரகசியமாக இருக்கிறதே!

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, (அக்டோபர் 2008) நிறைய சீன விண்டோசு பயனர்கள்
(பெரும்பாலானவர்கள் திருட்டுப் பிரதி நிறுவியிருப்பவர்கள்) அவர்கள்
கணினியில் ஒரு மர்மமான நிகழ்வை பார்த்தார்கள். ஒவ்வொரு மணி நேரத்திலும்,
கணினித் திரை சில விநாடிகளுக்கு இருட்டடித்து போகும். தொடர்ந்து
கணினியைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் வரவில்லை. ஆனால் இப்படி ஆளை
நோகடிக்கும் செயலை மைக்ரோசாப்டு சேர்த்திருந்தது (தந்தூரி கோழி செய்வதில்
ரகசிய சேர்க்கை போல).

"இந்த கணினியில் திருடப்பட்ட விண்டோசு நிறுவப்பட்டிருந்தால் ஒவ்வொரு மணி
நேரமும் சில விநாடிகளுக்கு திரையை இருட்டடித்துப் போகச் செய்" என்று
நிரல் கட்டளையை மைக்ரோசாப்டு சேர்த்திருந்தது. மென்பொருள் திருடப்பட்டது
என்பது வேறு விஷயம், மென்பொருளைத் திருடுவது தவறு, அதில் மாற்றுக்
கருத்தே இல்லை. விண்டோசுக்கு தானாக வந்த ஒரு மேம்படுத்தல் மூலம் (பொதுவாக
மேம்படுத்தல் பழுதுகளை சரி செய்வதற்கும், புதிய வசதிகளை சேர்ப்பதற்கும்
செய்யப்படுகிறது), இது நிகழ்ந்து விட்டிருந்தது. ஏற்கனவே இருந்த
மென்பொருளை எப்படி பாதிக்கும் என்று தெரியாமலேயே அந்த கணினி
உரிமையாளர்கள் மேம்படுத்தலை செய்து கொண்டிருந்தார்கள்.

கட்டற்ற மென்பொருள்களில் மூல நிரல் மாற்றப்படுவது வெளிப்படையாகத்தான்
நடக்கும். வரையறையின்படியே எல்லா நிரல்களும் பொதுவில் வைக்கப்படுகின்றன.
எல்லோராலும் மூலநிரல்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால்
புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதைப் படித்து, குரல் கொடுக்க முடியும்.

யாராவது நிரலை மாற்றினால், மற்ற மென்பொருள் பணியாளர்கள் இந்த
மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ("ஏம்பா, விசைப்பலகையில்
தட்டச்சுவதை எல்லாம் பதியும் இந்த வரிகளை ஏன் சேர்த்திருக்கிறாய்? ஏதாவது
கிறுக்குப் பிடித்து விட்டதா?"). குறிப்பிட்ட மென்பொருள் திட்டத்தில்
பணியாற்றும் எல்லா மென்பொருள் வல்லுனர்களும் புத்தி மாறி, தீங்கிழைக்கும்
நிரல்களை சேர்க்க ஆரம்பித்தாலும், அந்தக் குழுவிற்கு வெளியில் இருக்கும்
ஒருவர் மூல நிரலை எடுத்து, இந்த நச்சு நிரல்களை எல்லாம் நீக்கிய புதிய
பதிப்பை வெளியிடலாம். அது பற்றிய விபரங்களையும் ஊரறிய அறிவிக்கலாம்.
எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது.

அதனால்தான், 'கட்டற்ற மென்பொருட்கள் நீங்கள் அறியாமல் உங்கள் முதுகில்
குத்தாது' என்று நம்பிக்கையோடு இருக்கலாம். செய்முறையில் என்னென்ன
சேர்கிறது என்று கண்காணிக்க ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list